நர்மியின் பனிப்பூ கவிதைத்தொகுப்பு அப்படித்தான் வாசகர்களோடு உரையாடுகின்றன. பனிப்பூ தொகுப்பை வாசித்து முடிக்கையில் துரோகங்களாலும், ஏமாற்றங்களாலும், அன்பின் பெயராலும் துண்டாடப்பட்ட எளிய மனதின் கண்ணீர்த் துளிகளின் ஈரத்தை வாசகர்கள் உணரக் கூடும்.
பனிப்பூ தொகுப்பின் பலம் என நான் கருதுவது அந்தக் கவிதைகளின் மொழி. வலிந்து திணிக்கப்படாத உணர்வுகள். வாழ்வின் அனுபவங்களையும் கவிதைகளாக்கும்போது வார்த்தைகளைத் தேடி அலையாமல் இயல்பான எளிய மொழியில் எழுதியிருப்பது கவிதைகளின் பலம். ஏனெனில், முதல்முறையாகக் கவிதை வாசிப்பவர்களும்கூட, இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளை வாசிக்கும்போது தனக்கான கவிதையாக, தன் அனுபவத்தைப் பேசும் கவிதையாக உணரச் செய்துவிடும். நர்மியின் கவிதைகளில் ஒரு பெண்ணின் குரல் என்று சொல்லும்படியாகச் சில கவிதைகளே உள்ளன. உதாரணமாக, ‘யட்சிகள்’ எனும் கவிதையைச் சொல்லலாம்.