தமிழக மக்களால் ஒரு திரைப்படப் பாடலாசிரியராகவே அதிகம் அறியப்பட்ட நா.முத்துக்குமாரின் கவிதைப் பயணம் கல்லூரி மேடைகளில்தான் தொடங்கியது. 'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' - என்று சொல்லி மேடையை ஆக்கிரமிக்கும் நா.முத்துக்குமாருக்கு கவிதையோடு பேச்சும் நன்றாகவே வாய்த்திருந்தது. ஆனாலும் கவிதைதான் அவரைக் காலப் போக்கில் கைகளில் தூக்கி வைத்துக் கொண்டது.புத்தகங்களின் புடைசூழவே வளர்ந்த நா.முத்துக்குமார் குறைந்தது ஒரு லட்சம் புத்தகங்களையாவது படித்திருப்பார் - என்கின்றனர் அவரது நெருங்கிய நண்பர்கள். அந்த புத்தகங்களின் சாரங்கள் அவர் பேச்சிலும் எழுத்திலும் எப்போதும் எளிய வடிவத்தில் வழிந்தன.