இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு இறைவனை வழிபடுவதே நம் மரபு. அந்த வகையில் வழிபாடுகளில் பூக்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் இலைகளுக்கும் புற்களுக்கும் உண்டு. சிவபெருமானுக்குப் பெரிய பூஜைகள் செய்வதைவிட பக்தியோடு ஒரு வில்வ இலையை சமர்ப்பித்தாலே அவர் மனம் மகிழ்ந்து அருள்வார் என்கிறது லிங்காஷ்டகம். பெருமாளுக்குத் துளசி இலைகளைப்போன்ற உயர்வான சமர்ப்பணம் வேறு இல்லை. எளிமையின் வடிவான விநாயகப்பெருமானுக்கோ வன்னி இலைகள் கொண்டு செய்யும் ஆராதனை மிகவும் சக்திவாய்ந்தது என்கின்றன சாஸ்திரங்கள். மேலும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் இலைகளின் மூலம் வழிபாடு செய்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது. அப்படி பலன்தரும் பத்ர வழிபாடு குறித்துக் காண்போம்.