தொன்மத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்தன கலைகள். மகிழ்ச்சியிலும் சரி, துக்கத்திலும் சரி... கலைகளே அம்மக்களின் வடிகாலாக இருந்தன. தமிழ்ச்சமூகத்தின் அடையாளமாகவும், சிறப்புமாகவும் இருந்த பெரும்பாலான கலைகள் இன்று அழிந்துவிட்டன. கலையை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்த கலைஞர்கள் இன்று வெவ்வேறு தொழில்களில் வெதும்பிக்கொண்டிருக்கிறார்கள்.
பரபரப்பும் அவசரமும் நிறைந்த வாழ்க்கையைச் சுமந்து கொண்டு, தங்கள் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் இழந்துவிட்டு எதை நோக்கியோ இலக்கற்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். கரகாட்டம், பறையாட்டம், கும்மி, காவடி, மயிலாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து போன்ற வண்ணமயமான கலைகளும், கபடி, சிலம்பம், வளரி (பூமராங்), வாள் சண்டை, வடம் இழுத்தல், ஈட்டி எறிதல், வழுக்கு மரம் ஏறுதல், வில் அம்பு எய்தல் போன்ற தமிழ் பண்பாடு மணக்கும் விளையாட்டுகளும் இன்றுள்ள பிள்ளைகளுக்கு அந்நியமாகிவிட்டன. நம் தமிழர் வாழ்வில் ஒன்றிணைந்து கிடந்த கலை, பண்பாடு, கலாச்சாரம், வீரம், விவசாயம், விளையாட்டு, உணவுப் பழக்க வழக்கங்கள் போன்ற பல்வேறு மரபுவழி சார்ந்த செயல்கள் இன்று காணாமல் போய்விட்டன. தமிழர்களின் மரபுவழிச் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு திறன்களை வளர்க்கும் விதமான பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்கிற நோக்கம்.