சங்க நூல்களை மட்டும் படித்துச் சேரர் வரலாற்றை எழுதுவது சிறப்பன்று, சேரநாடு முழுமையும் இலக்கிய அறிவோடு சுற்றி, வரலாற்று உணர்வோடு பண்டை இடங்களைக் கண்டறிந்து வரலாறு எழுதுவதே சிறப்புடையது. இச்சீரிய முறையில் பேராசிரியர் ஒளவை .சு. துரைசாமிப்பிள்ளையவர்கள் , சேரநாடு முழுமையும் சுற்றித் தொண்டி , வஞ்சி முதலிய வரலாற்றுப் புகழ் படைத்த இடங்களைக் கண்டறிந்தும்; மலைகள் , ஆறுகள் முதலியவற்றின் பண்டைப் பெயர்கள் இன்னவை. இக்காலப் பெயர்கள் இன்னவை என்பவற்றை ஆராய்ந்து அறிந்தும் இந்நூல் எழுதியிருத்தல் மிகவும் போற்றத்தக்க செயலாகும்.