கப்பல்காரன் கலியாணம் முடிந்து கொஞ்ச நாளிலேயே, கலியான மஞ்சள் குங்கும வாசம் அடங்க முதலே, கப்பலுக்குப் போயிட்டார், போயிட்டு ஆறு மாதம் கழித்து ஒருநாள் டாக்சியில் வந்து இறங்கினார், அவர் கொண்டுவந்த பெரிய பெரிய சூட்கேசை டக்சிகாரன் இழுக்க ஏலாமல் இழுத்து இறக்க ,கப்பல்காரன் பென்சன் அண்ட் கெட்சஸ் வெளிநாட்டு சிகரட் தங்க நிறப் பெட்டியில இருந்து எடுத்து ,அதன் பின் பக்கத்தை பெட்டியிலேயே தட்டி,கொஞ்சம் விரல்களுக்கு இடையில வைச்சு சுள்ளட்டி போட்டு , வாயில வைச்சு லைட்டரை டக் எண்டு அமத்தி , ஒரு தங்கநிற லைடரில அதைப் பத்தவைத்து கொண்டு இருக்க ,நாங்கள் எல்லாரும் வேடிக்கை பார்கப் போக எங்களுக்கு, இன்னொரு பெட்டியில இருந்து சொக்கிலட் எடுத்து தந்தார், வக்சலா முகம் முழுவதும் சிரிப்போட சந்தோசமா ரோட்டுக்கே வந்து அவரின் கையைப் பிடிச்சு,
" இதில நிண்டு சிகரட் குடிக்க வேண்டாம் , பரிசுகேடு ,ஆட்கள் விடுப்பு பாக்குதுகள்,உள்ளுக்கு வாங்கப்பா "எண்டு இழுத்துக்கொண்டு போனா , அதுக்கு பிறகு வந்த முதல் கொஞ்ச நாள் கப்பல்காரன் வெளியவே வரவேயில்லை,