விமலாதித்த மாமல்லனின் தொகுப்பான அறியாத முகங்கள், இன்றைய சிறுகதைச் சூழலில் கவனம் கொள்ள வேண்டியதும் பொருட்படுத்திப் பேச வேண்டியதும் ஆகும். அடர்த்தியான வாழ்வனுபவங்களும் செறிவான தன்மையும் அமைந்த, நகர்சார்ந்த சிறுகதைகள் என்ற வகையில் இவருடைய எழுத்துக்குத் தனி ஒரு இடம் உண்டு
மாமல்லனின் சிறுகதைகள் எந்தப் பாசாங்குமற்றவை என்பதே நல்ல விஷயம். இவர் இயல்பிலேயே இந்தத் தன்மையைப் பெற்றிருக்கிறார் என்பதே பெரிய விஷயம். சமீபகாலமாக, நமது இலக்கிய உலகத்தில் அருகி வருவதும் காணக் கிடைக்காததுமான இந்த மெய்மை, ஒரு உயர்ந்த கலைஞனுக்கே உரித்தான குணவிஷேசமாகும்
மாமல்லனைப் பொருத்தவரை, மாநகர் சார்ந்த வாழ்நிலைகளைக் கண்டு சொல்கிற வெறும் தகவலாளியாக மட்டுமல்லாமல், இவையெல்லாம் எதற்காக, ஏன் இந்த மாதிரி என்று விசாரம் கொள்கிற மனிதனாக இருந்து, இவற்றின் உறுத்துதல்கள் தாளாது, எழுதிப் பதிவு பண்ணி வைப்பதோடு, ஒரு அமுங்கிய குரலில் கண்டனம் செய்கிற படைப்பாளியாகவும் இருக்கிறார் என்பது விசேஷமானது.