வகுப்பாசிரியர் குறிப்பிட்ட பாடத்தை நன்கு நடத்தி முடித்துவிட்டு மாணவர்களைப் பார்த்து, "ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்" என்றார்.யாரும் எதையும் கேட்கவில்லை. வகுப்பு முடிய இன்னும் நிறைய நேரம் இருந்தது. ஆனாலும் ஆசிரியர் அடுத்த பாடத்தை நடத்தாமல் அந்தப் பாடத்தையே மீண்டும் மீண்டும் படிக்கும்படி வலியுறுத்தினார். அதுதான் அவருக்கே உரித்தான வழக்கமும்கூட. எப்போதுமே ஒரு வகுப்பில் ஒரு பாடத்தை மட்டுமே நடத்துவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த வகுப்பில் படிக்கும் மாணவன் சேகருக்கு இது பிடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் ஒரே பாடத்தை நடத்துவதை வெறுத்தான். ஒரு நாள் அதை நேரடியாக அவரிடமே கேட்டும்விட்டான். "ஒரே பாடத்தைத் திரும்பத் திரும்ப நடத்துவதால் அது எளிதாக மனத்தில் பதியும் என்பது உண்மைதான் சார். ஆனால் வெவ்வேறு பாடங்களை வெவ்வேறு உதாரணங்களுடன் நீங்கள் நடத்தும்போது அது மனதிற்கு இதமாகவும் இருக்கும் அல்லவா? அதோடு அடுத்த பாடத்தை நடத்தாமல் நேரத்தை வீணாக்கலாமா சார்? " என்றான்.
ஆசிரியர் சிறுது நேரம் அவனை அமைதியாகக் கூர்ந்து பார்த்தார். பிறகு, "நீ சாயங்காலம் என்னோட வீட்டுக்கு வா!" என்று சொல்லிவிட்டு, வகுப்பு முடிந்ததும் கிளம்பினார்.