அறிவியல் வளர்ச்சியின் காரணமாக நாட்டில் பல்வேறு மாற்றங்கள் விரைவாக
நிகழ்ந்து வருகின்றன. மக்களும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்களைப்
பல்வேறு நிலையிலும் மாற்றிக் கொண்டு வருகின்றனர். அவர்களின் உண்மைப்
பண்புகளும் பாரம்பரியமும் முழுவதும் மறைந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் இத்தகு மாற்றம் விரைவாக ஏற்பட்டு வருகின்றது.
கிராமப்புறங்களில் மிக மெதுவாகவே இம்மாற்றம் ஏற்கப்படுகிறது. அங்கும்
உண்மைத்தன்மை மாறிவிடுமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனினும் அடிப்படை நாகரிகமும், பண்பாடு களும் நாட்டுப்புறங்களில்
இன்று முழுவதும் மாறி விடவில்லை. அவை அம்மக்களின் பண்புகளை,
பழக்கவழக்கங்களை இனங்காட்டி வருகின்றன.
நாட்டுப்புற வழக்காறுகளில் ஒன்றான பழமொழிகள் பல்வேறு கிராமப்
பகுதிகளிலும் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. அவை அவ்வப் பகுதி மக்களின்
பல்வேறு பண்பாடுகளை உணர்த்துவனவாக உள்ளன. நாமக்கல் வட்டாரப் பழமொழிகள்
அப்பகுதி மக்களின் பண்பாடு களை இனங்காட்டி வருகின்றன. அவற்றை வெளிப்படுத்த
முனைவதே இந்நூலின் நோக்கம்.