இந்தத் தலைப்பைப் படித்து முடித்த உங்களுக்கு இது ஒரு பிழையான கருத்தை தந்திருக்ககூடும் என்று எனக்குப் படுகிறது. அது கவலையாகவும் இருக்கிறது. இங்கு நீங்கள், இங்கே படிக்கப்போவது அசோகமித்திரனின் கதைகள் பற்றிய என்னுடைய ஒரு காரசாரமான கணிப்பு என்று எண்ணிவிடப் போகிறீர்கள். இந்த இலக்கிய வேலைக்கு ஒரு நீண்ட அவகாசம் தேவை. ஒரு சின்ன அமேசன் காட்டையே அழித்து தாள் உருவாக்கும் அளவுக்கு அசோகமித்திரன் தரமாக எழுதியிருக்கிறார். அவற்றை இங்கே கணிப்பிடுவது என்னுடைய நோக்கமல்ல. அசோகமித்திரன் நல்ல அருமையான கதைகள் தந்திருக்கிறார் என்பது வாசகர்களுக்குத் தெரிந்த விஷயம். இது யாழ்ப்பாணம் சுபாஸ் கபே சர்பத் இனிப்பாக இருக்கிறது என்று சொல்வதைப் போன்றது. கதாசிரியர்கள் நல்ல கதைகளைத் தருபவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். நல்ல கதாசிரியரான அசோகமித்திரன் எனக்குத் தந்த கதைப் புத்தங்கள் பற்றிய கட்டுரை இது.