உன்னைக் கண்டதும் காதல் கொண்டுவிட்டேன். முதலில் உன்னிடம் பேசிப்
பழகி, உன்னைப் புரிந்துகொண்டு, நீ எனக்கு ஏற்றவளா என ஆராய்ந்து, பிறகு
உன்னைக் காதலித் திருக்கலாம் என்று யாராவது சொன்னால், அவர்களுக்காக நான்
காதலிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அது காதல் இல்லை; கணக்கு. அதைத்
தவிர அதில் வேறு இல்லை. ஆனால், கண்டதும் காதல்கொள்வதில்தான்... எல்லாம்
இருக்கிறது. உன்னை முதல்முறையாகப் பார்த்ததும்....அதுவரையில் இருந்த இடம்
தெரியாமல் இருந்த என் இதயம் விஸ்வரூபம் எடுத்து `இவள்தான்... இவள்தான்'
எனக் கூவியபோது ஆரம்பமானது, கண்டதும் காதலின் மகிமை. உன் பெயரைத்
தெரிந்துகொள்ள நான் பட்ட பாடு... அதைக் கண்டு நீ ரசித்தபோது நான்கொண்ட
உவகை... உன் பெயர் தெரிந்த அந்த ஆனந்தக் கணம்... உன் முதல் புன்னகையைப் பெற
நான் செய்த சாதனைகள்... அதைப் பெற்றபோது வானுக்கும் மண்ணுக்கும் நான்
குதித்த குதிகள்... நான் பேசியபோது நீ பேசாமல் போன இனிய வருத்தங்கள்...
போனால் போகிறதென்று முதல்முறையாக `என்ன' என்று நீ என்னிடம் பேசிவிட்ட
அற்புதப் பொழுது... காதலை வரைந்து நான் எழுதிய வாழ்த்து அட்டையை உன்னிடம்
தந்த தருணம்... என் காதலை ஏற்றுக்கொண்ட அந்த மகா தருணம்... இதெல்லாம்
கண்டதும் காதல் எனக்குத் தந்த பேரின்பங்கள். இப்போது சொல்... நான் உன் மீது
கண்டதும் காதல்கொண்டது சரிதானே.