ஒருவேளை இவன் நம்மைக் காதலிக்கிறானோ என நீ எப்போதாவது
நினைத்திருந்தால் அந்த நினைப்புக்கு இந்த நூல் காணிக்கை. ● கல்லூரி
விடுமுறை நாட்களில் யாருமற்ற வீதிகளில் உன்னை பார்க்கையில்... நீ வேறு
மகாலக்ஷ்மியாய் இருப்பாய். உலகின் மொத்த மகிழிச்சிகளும் வந்து உன்
முகத்தில் குடியிருக்கும். என்னைக் கண்டால் இயல்பாகக் கடந்து போவாய். உன்
இயல்பு எனக்கு பேரானந்தத்தைத் தரும். திராட்சை விற்கும் பாட்டியிடம் அரசமர
ரவுண்டானாவில் அமர்ந்து நான் பேசிக் கொண்டிருக்கையில்... உன் தோழியோடு
வரும் நீ...சைக்கிளை நிறுத்திவிட்டு...'எப்படி இருக்கீங்க பாட்டி' என்று
பாட்டியோடு பேசத் தொடங்குவாய். நான் கொஞ்சம் விலகி அமர்ந்து கொள்வேன். பேசி
முடித்துவிட்டுப் போகையில்...என்னை ஒரு பார்வை பார்ப்பாய். எந்த தெய்வமும்
எந்த பக்தனையும் பார்த்திராத பார்வை அது. ●