ஒரு விஷயத்தை அழுத்தமாகப் பதிவு செய்ய அவர் எடுத்துக் கொள்ளும்
கவனமும், அதற்கென்று அவர் கையாளும் உத்திகளும் அவருடைய எழுத்துக்களை
சுவாரசியம் மிக்கதாக்குகின்றன. அத்தகைய கவனமும் சிரத்தையுமாய் அவர் எழுதும்
எழுத்துக்களின் சான்றாய் இந்தப் பன்னிரண்டு கட்டுரைகளும் பளிச்சிடுகின்றன.
கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் நகைச்சுவை, நிறைய வாழ்வியல், நிறைய நிறைய
நம்பிக்கை இந்தக் கட்டுரைகளில் மிளிர்கின்றன. வெற்றி என்பதும், வெற்றிக்கான
சக்தி என்பதும் எங்கேயோ இருக்கும் எட்டாக் கனிகளல்ல. நம் மனதுக்குள்ளேயே
பழுத்திருக்கும் மகத்தான சக்திகள் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. அவரவர்
மனதின் அளப்பரிய சக்தியை அறிந்துகொள்ள இந்தக் கையடக்க அகராதி கைகொடுக்கும்.