கவிஞர் கண்ணதாசனுடைய கவிதைகள், பாடல்கள் அனைத்தும் காலக்கண்ணாடி போலத் திகழ்வன. இச்சமுதாயத்தில் அது பிரதிபலிக்காத முகங்களே இல்லை எனலாம். சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளையும், கோணல் மாணல்களையும், வர்க்க பேதங்களையும்கூட அவருடைய கவிதைகள், பாடல்கள் மூலமாக நம்மால் தரிசிக்க முடிகிறது.
சமதர்ம சமுதாயத்தைத் தம் கவிதைகள் வாயிலாகப் படைக்கத் துணிந்த கவிஞர் "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார். "வல்லான் பொருள் குவிக்கும் தனி உடைமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொது உடைமை' என்று மார்க்சின் பொது உடைமைத் தத்துவத்தைப் பட்டித் தொட்டி எங்கும் பாடல்களாக ஒலிக்கச் செய்த கவியரசர் கண்ணதாசன், வறுமையை இல்லாது ஒழிக்க வேண்டும் என்று வலிமையாகக் குரல் எழுப்பியவர்.