அறிவியல் துறை ஆய்வுப் பணிகளுக்குக் கணிபொறி பயன்படுவது போன்று மொழி ஆய்வுப் பணிகளுக்கும் அதன் பயன்பாடு மிகவும் இன்றியமையாததாகும். இந்நோக்கில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி வழி சில மொழி ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வினைத் தரப்படுத்துதல், துல்லியப்படுத்துதல், வேகப்படுத்துதல், நேரம் மிச்சமாக்கல் மற்றும் உடல் உழைப்பைக் குறைத்தல் போன்ற பல நிலைகளில் கணிப்பொறி பயன்படுவதை உணர்த்தி கணிப்பொறி ஓர் மொழியாய்வுக் கருவி என்னும் கோட்பாட்டை நிறுவி வருகிறது. மொழி ஆய்வுப்பணிகளுக்குக் கணிப்பொறி பயன்படும் விதத்தைச் செயல்முறையாகவும், நூல்கள் மூலமாகவும், பயிற்சி வகுப்புகள் மூலமாகவும், ஏனைய பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்ள ஒரு தூண்டு கோலாகக் கணிப்பொறி துறை விளங்குகிறது. கணிப்பொறி வழி மொழி ஆய்வுளை மேற்கொள்ளுதல், ஆசிரியர் ஆய்வாளர்களுக்குப் பயிற்சி அளித்தல் போன்ற பணிகள் மூலம் கணிப்பொறித் தமிழ்க் களம் அமைப்பதில் கணிப்பொறித் துறை பங்களித்து வருகிறது.