குழந்தைகள் மனத்தைக் கொள்ளை கொள்ளும் தன்மை வாய்ந்தது, பட்டுச்சிறகு. பட்டுச்சிறகை விரித்துப் பட்டாம் பூச்சி போலப் பறப்பதற்கு ஆசைப்படாத குழந்தைகளே இல்லை. அன்று இரு குழந்தைகள் அப்படி ஆசைப்பட்டதால் தான் நாம் இன்று ஆகாய விமானத்தைப் பெற முடிந்தது. ஆம்; சின்னக் குழந்தையாய் இருந்தபோது ரைட் சகோதரர்கள் பட்டுச்சிறகை விரித்துப் பறக்க ஆசைப்பட்டதால்தான். அவர்கள் பின்னாளில் ஆகாய விமானத்தைச் செய்து உருவாக்க முடிந்தது. கனவிலும் கற்பனையிலும் மிக அதிகமாய் மிதக்கும் பருவம், குழந்தைப் பருவம். அவர்கள் ஆசையை - ஆற்றலை - நெறிப்படுத்தி வளர்க்கும் விதத்தில் குழந்தை இலக்கியம் படைப்பது குழந்தை எழுத்தாளர்களின் தலையாய கடமை.