எழுத்தாளர் பொன் விக்ரம் அவர்களின் 'கச்சேரி மாயக்கா' என்ற நாவல் எனக்கு வாசிக்க கிடைத்த தருணம் மிக முக்கியமானது, ஏனெனில் தமிழ் எழுத்து உலகில் தீவிர எழுத்து வகைகள் விதவிதமாக கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், காதல், மோதல், கவர்ச்சி, விரசமென, ஒன்றுக்கு மேல் ஒன்றாக, அடுக்கடுக்காய் படிந்த அழக்கு மூட்டை போல் இல்லாமல், வாழ்ந்து முடித்த ஒரு பழங்குடி இன மக்களின் வாழ்வியல் சித்திரமாக உள்ளது.
இது குற்றப்பரம்பரை என்று ஆங்கிலேயர்களால் குத்தப்பட்டு அவமதிப்புக்கும் அலைக்கழிப்புக்கும் ஆளாக்கப்பட்ட ஒரு சமூகத்தின் மனப்போராட்டங்களையும் ஆதிக்கத்துக்கு அடிபணியாத சுதந்திர மனோபாவத்தையும் பேசும் நாவல் என்றே பார்க்கிறேன். காவல் பிறழும்போது களவு தலையெடுக்கிறது. அந்தப் பண்பாட்டின் பிரதிநிதியாக காதில் விரலை நுழைத்துச்செல்லும் சிறுமி வீரம்மா கழுத்தைத் திருகிக் கொல்லப்படுகிற இடம் வாசகமனதை அதிரச் செய்கிறது. அக்கொலைக்குப் பழி தீர்க்க மாயக்காவால் வேல் கம்பெடுத்துப் போகும் வீரணன் கொலையாளிகளின் பிணக்குவியலோடு ஊர் திரும்புகிறான்.
எழுத்தாளருக்கு இந்த கிராமம் அந்நியப்பட்டதல்ல, கதை மாந்தர்களும் யாரோ கற்பனை பாத்திரங்களும் அல்ல, எழுத்தாளரின் பூர்வீக மண்ணின் இவரது முன் தோன்றல்கள் குறித்தே கதை அல்லது உண்மைச் சம்பவங்களின் பதிவு, அதனால் வீரியமிக்க வாசிப்புக்கு இடம் கொடுக்கும் விதமாக நாவல் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இதனை நாவல் என்பதைக் காட்டிலும் ரத்தமும், சதையுமாக வாழ்ந்த, கள்ளர் என்ற இனக்குழுவின் வாழ்வியலாகும், உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் மிகச் சில கதாபாத்திரங்களை கொண்டு எதார்த்தமாக படைக்கப்பட்ட குறு நாவல் எனலாம்.