அலைகுடி மரபினள் அவள்
விளைநிலம் போன்ற வாழ்வின்
சாரம்மிகு பாடல்களினால்
நிரம்பியது அவளின் மனம்
பல்லுயிர்கள் வாழுகிற
நிலம் முழுதும் அலைந்து
பாடல்களின் சொற்ளைத் தேர்கிறாள்
காட்டினுள் நுழைந்து திரும்புகையில்
காணுயிர்களின் இணைவிழைவின்
வாசனைகளைச்
சொற்களாக உணர்ந்திருப்பாள்
வயல்வெளிகளின் நீர்ப்பரப்பில்
அயிரை தெறிக்கும்
சேற்றின் திலகம் ஏற்றிருப்பாள்
முல்லை நிலத்தின்
பரந்தவெளியில் திரிகிற
கால்நடைகளின் அழைப்பின்
வேறுபாடுகளை அறிந்திருப்பாள்
சில பொழுது
நெய்தல் நிலத்தின்
நிறம் மாறுகிற சீற்றத்தின்
குரலாகவும் ஆகியிருப்பாள்
முகிழும் காதலைப் பாடுகையில்
தாளவிசை பெருகி
சொற்களேதுமற்று
அவளே இசையாகியிருப்பாள்.