என்னிடம் கைவசம் இருப்பது மிகச் சில மேற்கோள்கள்தான். அவற்றுள் ஹெராக்ளிட்டஸ் தந்தது முக்கியமானது. 'குளிப்பதற்கு முந்திய ஆறும், குளித்த பிறகான ஆறும் ஒன்றல்ல'. இதையே எளிமையாகச் சொன்னால், 'ஒரே ஆற்றில் இரண்டு முறை குளிக்க முடியாது'. அந்த ஆறுபோய், இந்த ஆறு வந்திருக்கிறது. இதுவேறு ஒரு ஆறு. அதே ஆனந்தன்தான். ஆனால் இவை வேறு கதைகள். ஒரே வாழ்வு, வேறு வேறு அனுபவங்கள். ஒரே வானம், வேறு வேறு மேகங்கள். ஏன் ஒரே மனிதன், வேறு வேறு முகங்கள். சொல்லிக் கொண்டே போகலாம். எழுதுகிறவன் கூட, ஒரு நுட்பமான விதத்தில் பார்த்தால், ஒரே ஒரு கதையையே வேறு வேறு தலைப்புகளில் எழுதிக் கொண்டு இருக்கிறான்.