உங்கள் ஊரில் சமீபத்தில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றிய நீ மிகவும் துயரத்தோடு எழுதியிருந்தாய். அந்தச் செய்திகளை நானும் பத்திரிகையில் படித்தேன். எனக்கும் மிகவும் வேதனையாகத்தான் இருந்தது. மதத்தின் பேரால் மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்வதைப் போன்ற காட்டுமிராண்டித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. சமீபத்தில் இப்படிப்பட்ட துயர நிகழ்ச்சிகள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடைபெறுவதை படிக்கின்றபோது, நாம் எங்கோ போய் கொண்டிருக்கிறோம் என்கிற சந்தேகம் எழத்தான் செய்கிறது.