வயது செல்லச் செல்ல
வரிசை கட்டிவரும் ஆசைகளில்
இதுதான் முதலாசை
பெரியாசை
பேராசையும் கூட
எந்த நாட்டில் செத்தாலும்
செத்த உடலைப்
பொத்தி எடுத்து வந்து
உள்ளூர் தண்ணீரில்
குளிப்பாட்டி
ஊரார் தொட்டழுக
காட்டுநெடுங்குளம் மண்ணும்
கரையானும் மட்டுமே
தின்று தீர்க்க வேண்டும்
இந்தத் திருநாள்
வைபவத்தைக்
கடவுளும் காலனும்
கலந்துரையாடி
ஓய்வுநாளில் நடத்தினால்
உற்றாகும் மற்றாரும்
வந்து வந்து
வழியனுப்ப வசதியாகும்
பிறந்த மண்
எனது இரண்டு கண்.