வேளாண்மையில் உயிரியல் தொழில்நுட்பம் என்பது மிகவும் புதிய கண்டுபிடிப்பாகும். வருங்கால வேளாண்மையில் அரிய சாதனைகள் புரிய இத்துறையின் தொழில்நுட்பங்கள் பெரிதும் துணை புரியவல்லன. பயிர்களின் உற்பத்தித்திறனைப் பெருக்கவும்,நோயில்லாத அல்லது நோய்களையும் பூச்சிகளையும்,தாங்கி வளர்ந்து பலனளிக்கக்கூடிய இரகங்களை,பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுக்கான உயிரியல் நுட்பங்கள் இன்னும் கால்நடை வளம் பேணும் நுட்பங்களைப் பயன்படுத்தி,உருவாக்கிப் பெருக்கிக்கொள்ளலாம்.
இந்நுட்பங்களை வேளாண்மை மாணவர்கள்,உழவர்கள் ஆகியோர் அறிந்துகொள்ளும் வகையில் வல்லுநர்கள் தமிழில் எழுதவேண்டும். அதற்கு அடிப்படைத் தேவை கலைச்சொற்கள். கலைச் சொற்கள் இல்லாமையாலேயே தமிழ்நாட்டில் இன்று எழுதப்படும் பல நூல்கள் இன்னும் ஆங்கிலத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.