“இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ‘அறம் வளர்ப்போம்’ இயக்கத்தை
நடத்துகிறார்கள். முதியோர் இல்லம், அன்னதானம், பள்ளி... என தங்களுக்கு
சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள்.
இந்த ‘அறம் வளர்ப்போம்’ இயக்கத்தின் செயல்பாடுகளை முடக்க மாநிலக் கட்சி ஒன்றின் வட்டச் செயலாளர் முற்படுகிறார்.
இதை முறியடித்து இளைஞர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதே ‘அறம் வளர்ப்போம்’ குறுநாவல்.
எம்ஜிஆர் இருந்து படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தால் இக்குறுநாவலை
படமாக எடுத்திருப்பார். அந்தளவுக்கு இதில் ஆக்ஷன், சென்டிமெண்ட்,
த்ரில்லர்... என எல்லாம் இருக்கின்றன.
கிரேஸி மோகன் இருந்து அவரிடம் இக்குறுநாவல் கிடைத்திருந்தால் நகைச்சுவை
நாடகமாக அரங்கேற்றி இருப்பார். அந்தளவுக்கு ‘அம்னீஷியா’ நோயை வைத்து
எழுத்தாளர் விளையாடி இருக்கிறார்.
இவர்கள் இருவரும் இல்லாவிட்டால் என்ன, யாரேனும் பின்னாளில்
இக்குறுநாவலை பயன்படுத்தக் கூடும் என்ற இனிய நம்பிக்கையில் ‘சந்தியா
பதிப்பகம்’ இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
கண் மருத்துவராக இருக்கும் டாக்டர் கோகிலவாணியின் முதல் நாவல் இது.
பார்வையில் பழுதில்லை. சொல்ல வந்த கருத்திலும் குறைவில்லை.
பயணங்களில் படிப்பதற்கான நாவல்கள் என்ற வரிசையில் ‘அறம் வளர்ப்போம்’ குறுநாவலுக்கும் ஓர் இடம் உண்டு.