பட்டினத்திற்கு வந்தபின் அவனுடைய வாழ்வு மாறித்தானாக வேண்டியிருந்தது. கந்தசாமி வாத்தியாரின் கானாமுத நடன விநோத நாடக சபாவில் பாடல்களும், வசனமும் எழுதிச் சமயா சமயங்களில் - மேடையேறி நடித்தும் வந்த காலத்தில் அவனுடைய வாழ்க்கையில் இவ்வளவு வேகமுமில்லை, பிரகாசமுமில்லை. மதுரையிலும் சென்னையிலும் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள் இவ்வளவு வேறுபடக் காரணம் என்னவென்று சிந்திப்பதற்கு வேண்டுமானால் இடம் இருக்கலாம். வெளிச்சம் அதிகமாக இருக்கிற இடத்தில் சிறிய வாழ்வு கூடப் பெரியதாகத் தெரியலாம்; வெளிச்சம் குறைவாயிருக்கிற இடத்தில் பெரிய வாழ்வு கூடச் சிறிதாய் மங்கிப் போகலாம்