விஜய நகரத்தில் ஒரு செட்டியார் மளிகை வியாபாரம் செய்து வந்தார். ஒரு சமயம்
அவரிடமிருந்த சர்க்கரை கொஞ்சம் ஈரமாக நனைந்து இருந்ததால் அதனை வெளியில்
கொட்டிக் காயவைத்திருந்தார். அந்த வழியாக வந்த தெனாலிராமன் செட்டியாரைப்
பார்த்து என்ன அது என்று விசாரிக்க அதற்கு செட்டியார் வெள்ளை மணல் என்று
கூறினார். தெனாலிராமனும் ஏமாந்திருப்பார் என்றும் முடிவு செய்தார். ஆனால்
வெளியே காய்வது சர்க்கரை என்பதை நன்கு அறிந்த ராமன் சிறிது நேரத்தில் தன்
மகனுடன் ஒரு சாக்குப் பையை எடுத்துவந்து வேக வேகமாகச் சர்க்கரையை அள்ளிப்
போட்டு மூட்டை கட்டலானார்.
அதைப் பார்த்து அதிர்ந்த செட்டியார் என்ன செய்கிறீர்கள்
நீங்கள் நிறுத்துங்கள் என்று கூச்சலிட்டார். அதற்கு ராமன் செட்டியாரே என்
வீட்டின் முன்புறம் ஒரு பள்ளம் உள்ளது அதனை அடைக்கவே இந்த மண்ணை எடுத்துச்
செல்கிறேன் என்று கூற, செட்டியார் தான் உண்மையைக் கூறாமல் பொய் சொன்னதற்காக
ராமனிடம் மன்னிப்புக் கேட்டு சர்க்கரையை அங்கேயே விட்டுச் செல்லும்படி
வேண்டினார். அடுத்தவரை முட்டாளாக்கி மகிழ்வதில் பயனேதும் இல்லை என்பதை
செட்டியார் உணர்ந்தார்.