உரிமை மறுக்கப்பட்ட காமாட்சிபுரம் பிலால் நகராக உருமாற்றமடைந்தது. வைத்து அழகு பார்க்க முடியாத மீசைக்கப் பதிலாக தாடி, தலையில் கட்ட முடியாத துண்டுக்குப் பதிலாக குல்லா. மாராப்பே போட முடியாத ''தாழ்த்தப்பட்ட'' இனத்து பெண்டிரெல்லாம் தலைமூடி முக்காடிட்டுக் கொண்டார்கள். கருப்பசாமி காதர் பாயானார்.கருப்பாயி நுர்ஜஹானானாள்.
ஆறுமுகம் அன்சாரியானால்... வாழ்வு வசப்படுமென்று நம்பினார்கள். நாட்கள் வாரமானது. வாரம் மாதமானது, மாதம் வருடமானது,வருடம் பல பத்தாண்டுகளானது...ஆம் காமாட்சிபுரம் ஒரு விடுதலை வேள்விக்காய் தன்னைப் புடம்போட்டு பொருத்திருந்தது. கால ஓட்டத்தில் அம்மக்களின் நூறாண்டுக் கோபத்திற்கு சென்ற இடத்திலாவது விடை கிடைத்ததா? சொந்தச் சாதியின் உறவறுத்து உரிமை கேட்டு முழக்கமிட்ட மக்கள் கூட்டம் என்னவானது? வாழ்வியலில் சமநீதி கேட்ட அம்மக்களின் தட்டிய கதவுகள் திறந்ததா? முறையிட்ட காதுகள் கேட்டதா?