பிச்சமூர்த்தி சிறுகதைகளில் மூன்று காலகட்டங்களைக் காணமுடிகிறது என்று விமர்சகனாக எனக்குத் தோன்றுகிறது. ஆரம்பகாலத்திய கதைகள் Romantic - ’வானம்பாடி’, ‘கூண்டுக்கிளி’ முதலியன. அவற்றில் கவித்துவம் நிரம்பியிருந்தாலும் சுமாரான சிறுகதைகள் என்றுதான் சொல்ல எனக்குத் தோன்றுகிறது. ஒரு எட்டு வருட மௌனத்திற்குப் பிறகு மீண்டும் எழுதும் போது ‘பதினெட்டாம் பெருக்கு’. ஐம்பரும் வேட்டியும் போன்ற மனோதத்துவ பாங்கான கதைகளை எழுதினார். இது ஒரு வளர்ச்சி என்றும், இதைச் சாத்தியமாக்கியது அவருடைய இடைக்கால மௌனந்தான் என்றும் எனக்குத் தோன்றுகிறது. மீண்டும் சில ஆண்டுகள் மௌனமாக இருந்துவிட்டுப் பிறகு அவர் மீண்டும் சிறுகதைகள் எழுதும் போது அவர் கதைகளில் முழு அளவில் மெருகும் பூர்ணத்துவமும் ஏறிவிட்டன. இந்த மூன்றாவது காலகட்டத்தைச் சேர்ந்த அவர் கதைகளில் ‘காவல்’,’தங்கச் சங்கிலி.