சுயமரியாதைத் திருமணம் அல்லது பழந் தமிழர் திருமணம் என்று சொல்லிச் செய்யப்படும் திருமணமும் சட்டப்படி நியாயமானதே. வைதிக முறையில் என்ன உள் அர்த்தத்துடன் திருமணம் செய்யப்படுகிறதோ அதே உள் அர்த்தம் சுயமரியாதைத் திருமணங்களில் இருக்கவேண்டும் என்பது நியாயமான ஆசை. உங்களுடையதும் அப்படித்தானிருக்கும்.கல்யாணச் சடங்குகளின் அர்த்தம் மக்களுக்குப் புரியாததால் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல இருக்கிறது. அதனால் அவற்றின் மீதான வெறுப்பும், தொடர்ந்து அவற்றைத் தவிர்ப்பதும் ஏற்படுகிறது. சம்பிரதாயத்தை விட்டுவிடக்கூடாது என்கிற கருத்தில் பலர் சடங்குகளைச் செய்கிறார்கள். யாரையும் குறை சொல்லத் தேவையில்லை.தனித்தனியாக விலங்குபோல் வாழும் மனிதர்களை தம்பதியராக்கி, குடும்பமாக்கி, ஊராக்கி, நாடாக்கி அதன் மூலம் ஒட்டுமொத்த மனித சமுதாயமும் விடுதலை எனும் மோட்சத்தை அடையவேண்டும் என்கிற நல்ல உயர்வான, ஆன்மிக எண்ணத்துடனே வைதிகத் திருமணங்கள் நடத்தப் பெறுகின்றன.உலகில் வேறெந்த கலாச்சாரத்திற்கும் இல்லாத தனிப் பெரும் சிறப்பு பாரத கலாச்சாரத்திற்கு இருக்கிறது. ஒரு குடும்பத்தில் குழந்தை பிறந்தது முதல் வளர்ந்து அது அந்திம நிலை அடையும் வரை நாற்பது வகையான சம்ஸ்காரங்கள் (சடங்குகள்) உள்ளன. இவற்றுடன் ஊருக்குப் பொதுவான பண்டிகை, வழிபாடுகள், கோயில் விசேஷங்கள் ஏராளமாக உள்ளன. இவை அனைத்தையும் அம்புகளாகக் கற்பனை செய்துகொண்டால், இவற்றின் இலக்குப் புள்ளி ஒன்றே! மனித குலம் ஞானத்துவமடைந்து முக்தி பெற வேண்டும் என்பதே!ஒவ்வொரு சடங்கும், மந்திரமும் மனித மனத்தை விருப்பு வெறுப்புகளிலிருந்து விடுவித்து, செய்யும் காரியங்களை, தொழிலை ஈசனுக்கு அர்ப்பணிப்பாகவும், அதனால் கிடைக்கும் பலன்களை ஈசன் வழங்கும் பிரசாதமாகவும் எடுத்துக் கொள்ளும்படி ஆக்குவதற்கே பிரயோகிக்கப்படுகின்றன.