வழியாத வேர்வையை வழிந்தது போல் துடைத்துக் கொண்டு, அவள் மீண்டும் நிமிர்ந்து அமர, மனம், தன் வேலையைச் செவ்வனே செய்யும் பொருட்டு "உங்களைப் பற்றி சொல்லுங்கள்?” என்று கேட்டது! ''ம்ஹ்ம். ம்ஹ்ம்" என்று இருமுறை செருமியவள், "எ...எ...எ...எ... என் பேர் விதுபாலா!" என்றாள். "ப்ச்!" என்று மனம் சலித்தது! முதல் வாக்கியமே ஒழுங்காக வரவில்லையே! "சரி... சரி... இன்னொரு முறை முயன்று பாரேன், பாலா!" என்று தந்தை சொல்வது போல், மனமும் சொல்ல, திடத்தைத் திரட்டிக் கொண்டு "எ... எ... எ... என் பேர் வி... வி.... துபாலா!" என்றாள். "சே! அதைவிட மோசம்!" மீண்டும் "எ... எ எ என் பேர் விதுபாலா!'' இது கொஞ்சம் பரவாயில்லை. ஆனால், “என்” என்ற வார்த்தை வருவதற்குள், எதிரே இருப்பவன் ஒரு கொட்டாவியை விட்டு விடுவான். மீண்டும் முயற்சி செய்தாள் "எ... எ.. என் பேர் விதுபாலா,' ம்ஹூம் தொடர்ந்து பத்து முறை, பெயரையே சொல்லிக் கொண்டிருந்ததில், உதடும் நாக்கும் ஒரு பக்கமாய் வலிப்பது போலிருந்தது!