சுதந்திர இந்தியாவில் மகாத்மா காந்திக்கு பின் அனைவராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சில மனிதர்களில் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு
சகோதரனாக, ஒரு வழிகாட்டியாக ஒரு மனித நேயமிக்க மனிதராக, போற்றுதலுக்கு உரிய
மாமனிதராக வாழ்ந்த இந்தியர் தமிழர். டாக்டர் கலாம் குறித்து, இளைஞர்கள்
முதல் அறிவு ஜீவிகள் வரை பலரும் அவரைப் பற்றி எழுதியுள்ளார்கள். தான்
உயிரோடு வாழ்ந்த வரை, அவரை அறிந்தவர்கள் அனைவருமே போற்றும் வண்ணம் வாழ்ந்து
காட்டிய மாமனிதர்.
அவரின் மனிநேயப் பண்பு, அறிவியல் சாதனை இந்திய நாட்டின்
வளமையில் அவர் கொண்டிருந்த ஆர்வம் இலக்கியத்தில் அவருக்கிருந்த ஈடுபாடு
குறித்த எண்ணற்ற சிந்தனைக் குறிப்புகள் பத்திரிகைகளிலும், நூலாகவும்
வெளிவந்துள்ளது. அந்தச் செய்திகளைத் தமிழ் கூறும் நல்லுலகமும் அதன்
வாசகர்களும் மேலும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவாவினால். தோழர்
எம்.ஆர்.ரகுனாதன் இந்த நூலில் தொகுத்தளித்து உள்ளார்கள். "அறிவியல் மேதை
டாக்டர் கலாம் களஞ்சியம்” என்ற இந்த நூல். நமது தமிழ் மகன் டாக்டர் கலாம்
குறித்து உலகளாவிய அவரின் பெருமையை மேலும் நமது மக்கள் நன்கு அறிந்து
கொள்ளும் வகையில் படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.