இயேசு கூறிய அந்தக் கோவில் அவரது உடல் என்றும் யோவான் தன் நற்செய்தியில் கூறுகிறார். முற்றிலும் தகர்க்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட இந்தக் கோவிலை கடவுள் மூன்று நாட்களில் மீண்டும் கட்டியெழுப்பினார். இந்தக் கோவிலில் வியாபாரங்கள் கிடையாது, கடவுளை விலை பேச முடியாது, வெளிச் சுற்று, உள்சுற்று என்ற பாகுபாடுகள் கிடையாது, வறியோர், செல்வந்தர், பாவி, புண்ணியவான், யூதர், புற இனத்தவர், ஆண், பெண் என்ற எந்தப் பாகுபாடுகளும் இல்லாமல் அனைவரும் உள்ளே வரலாம். இறைவனை எந்தத் தடையும் இல்லாமல் கண்ணாரக் கண்டு நிறைவடையலாம். இத்தகைய அழகிய கோவில்கள் நம் சமுதாயத்தில் மீண்டும் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம்.