பார்த்துக் கொண்டேதானிருக்கிறோம் நாம், ஆனாலும் நிரம்பிக் கொண்டிருக்கின்றன பார்க்கப்படாத உபரிகள். கேட்டபடியே இருந்தும் இன்னும் கேட்கப்படாத உபரிகள், ரசிக்கப்படாத, படிக்கப்படாத உபரிகள், வாழப்படாத உபரிகள் எனும் உபரி சூழ் உலகில் உபரிகளை நோக்கி நகர்தல்களே நம் வாழ்வின் காலடித்தடங்களும்; குமரகுருவின் கவிதைகளும். மணலில் விழுந்து உள்ளொடுங்கும் ஒரு கண்ணீர்த்துளி வாழ்ந்துவிட்டுப் போகும் வாழ்வின் மிச்ச உபரிகளைத் தேடுகின்றன இக்கவிதைகள்.