வள்ளியப்பனை இரண்டு விஷயங்களுக்காக நான் எப்போதும் வியப்பேன். சலியாத உழைப்பு, அடங்காத ஆர்வம். எழுதுபவர்களுக்கு இந்த இரண்டு குணமும் இன்றியமையாதவை. தனது துறை சார்ந்து அவர் பெற்ற அனுபவங்களை எழுத்தாக மாற்றும்போது. அவர் எப்போதும் பாமர வாசகர்களை மனதில் கொள்கிறார். எளிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் எழுத்து ஒன்றே எந்தக்காலத்திலும் மேன்மையுறுகிறது. கொண்டாடப்படுகிறது. வள்ளியப்பன் பேசுவதுபோல எழுதுவார். எழுதுவதுபோலவேதான் பேசவும் செய்வார்.சோம. வள்ளியப்பனுக்கு முன்னால் தமிழில் ஒரிஜினல் சுயமுன்னேற்ற எழுத்து என்பது இல்லை. பெரும்பாலும் மேல்நாட்டுத் தழுவல்களாகவும் நமது வாழ்வோடு சம்பந்தப்படாத வறட்டு உதாரணங்களாகவுமே இருக்கும். இந்த மண்ணின் மனிதர்களை, இங்கு நிகழும் சாதனைகளை, நமது தேவைகளை நமது சமூகத்தின் இருப்பு நிலையை மனதில் கொண்டு அவர் எழுதுகிறார். அதனால்தான் இந்தத் துறையில் மற்ற யாரைக்காட்டிலும் அவர்க்கு அதிகம் வாசகர்கள்.அவரது அள்ள அள்ளப் பணம் என்கிற பங்குச்சந்தை குறிந்த புத்தக வரிசை, அவரைக்காட்டிலும் புகழ் பெற்றுவிட்டது. அலுவலகம், வீடு, எழுத்து என்று அனைத்தையும் சமாளித்துக்கொண்டு சுறுசுறுப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சோம. வள்ளியப்பனிடமிருந்து நிறையப் பயில முடியும். படியுங்கள், அவர் வேறு அவரது எழுத்து வேறல்ல.