ஜூலை மாதக் கடும் மழைநாளில் (மும்பையாக்கும்) எலக்ட்ரிக் ட்ரெயினில்
‘குர்லா’வில் இறங்கி ‘க்ளக் ப்ளக்’ சாலையில் கல்லூரி என்று குறிப்பிடப்பட்ட
அந்தக் கட்டடத்திற்கு இரண்டாவது முறையாகப் போனேன். இது எத்தகைய மெனக்கெடல்
என்று மும்பைவாசிகளுக்குத்தான் புரியும். சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ
எகனாமிக்ஸ் சேர விபரங்கள் கேட்டபோது TC இல்லாத காரணத்தால் ஏற்கனவே இந்த
ஸ்டடிசெண்டரில் மறுத்திருந்தார்கள். “இதுக்குமேல இந்தப் பொண்ணு
படிக்கமாட்டா” என்று எப்பொழுதோ சொன்ன ஜோசியக்காரனின் வாக்கை வியந்துகொண்டு
திரும்பிவிட்டேன். சிறிதுநாளில் ஐஐடியில் படித்தவர்களுக்கு டிசி கிடையாது
என்றாலும்
சேர்ந்திருந்ததைப் படித்துவிட்டு மீண்டும்
கிளம்பினேன். எதற்கும் இந்த முறை தீர்மானமாகப் பேசவேண்டும் என்று ரயிலில்
செல்லும்போதே 3, 4 தடவை இந்தியிலும் சொல்லிப் பார்த்துவைத்திருந்தேன்.
ஆனால் அங்கே இருந்தவர், “அதெல்லாம் நேரடியாகச் சேர்பவர்களுக்குச் சரியாக
வரும்; இங்கிருந்து நாங்கள் தபாலில் அனுப்பினால் டிசி இல்லையென்றால்
எதையுமே பார்க்காமல் அட்மிஷன் இல்லை என்று திருப்பி அனுப்பிவிடுவார்கள்.
அதுவும் 6 மாதம் கழித்துதான் திரும்பவரும். செலவான பணத்துக்கு நிர்வாகம்
பொறுப்பல்ல” என்று நல்ல தமிழிலேயே தெளிவாகச் சொல்லித் திருப்பியனுப்பினார்.
மீண்டும் ஜோசியனின் வாக்கை வியந்துகொண்டு..