சிறகுகளைத் தா எனும் இந்தக் கவிதை நூலின் ஆசிரியர் அனிச்சம் இருபத்தைந்து ஆண்டுகளாய் பள்ளி ஆசிரியராய் பணியாற்றுகிறார். அவ்வப்போது பத்திரிகைகளிலும் கவிதைகள் எழுதி வருகிறார். கவியரங்க மேடைகளிலும் பங்கு பெறுகிறார்.\
குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான அடக்கு முறைகளை முறியடிக்கும் ஆவேசம் இவரது கவிதைகளில் வெளிப்படுகிறது. போராட்டக் குணம் இவரது இயல்பு. கல்லூரி நாட்களில் லால்குடி, அன்பில் பகுதியில் பொது மக்களுக்கான பஸ் வசதி கோரி நடந்த மறியல் போராட்டம் உட்பட உள்ளூர்மக்களுக்கான பிரச்சனைகளுக்காக தான் சார்ந்த இடதுசாரி இயக்கத்தின் சார்பாய் போராட்ட களத்தில் முன்னணியில் நின்றவர். இவரது பல கவிதைகளில் கோபமும், சில கவிதைகளில் மென்மையும் ரசிக்கும் படியாகவே இருக்கின்றன. பெண்ணியம் பேசும் இவரது முதலாவது கவிதைத் தொகுதி இது. துயரங்களுக்குத் தீயெழுதும் துணிச்சலான முயற்சி இவரது கவிதைத் தொகுதி.
- பதிப்பகத்தார்.