'' சாதகப் பறவைகள்'' எனும் இந்நூலில் கிராமிய உணர்வுகளை இழை இழையாகப் பின்னி சமுதாய விழிப்புணர்வு என்னும் உடையை நெய்து தருகிறார். மனித நேயத்தைச் சிதைக்கும் சுயநலவாதிகளின் போக்குகள் மாறவேண்டும், மாற்றப்படவேண்டும் என்றும், இந்திய மண்ணில் சகோதரத்துவம் நிலைநிறுத்தப்படவேண்டும் என்றும், சமுதாயத்தில் ஒழுக்கநெறி மேம்பட வேண்டும் என்றும், குடும்பத்தில் நல்ல தாய் அமைந்தால்தான் பிள்ளைகளின் வாழ்வு நல்லதாய் அமையும் என்றும், தீண்டாமை உணர்வு விலக்கப்படவேண்டும் என்றும், அடிமைத்தனம் அகற்றப்படவேண்டும் என்றும் இந்நூலில் இடம்பெறும் சிறுகதைகள் வாயிலாகச் சித்திரித்துக் காட்டுகிறார்.
கதை தொடங்கும் விதம், வளர்க்கும் விதம், எழுத்து நடை, முடிக்கும் விதம் ஆகியவை புதிய உத்திகளைக் கொண்டவை. சமுதாயச் சீரழிவுகளைப் பேரழிவுக்குள்ளாக்கிப் புதிய மனிதயுகம் தொடங்க வேண்டும் என்ற உத்வேகம் அவருடைய கதைகளில் பளிச்சிடுகிறது.