பல ஆயிரம் ஆண்டுகளாக இடைவிடாமல் ஒரே பாதையில் பயணம் செய்து கொண்டிருந்த கோடானு கோடி நட்சத்திரங்களுக்கு இடையில் ஒரு சின்ன அசைவு. வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் நிகழ்ந்தது. மறுபடியும் பழைய நிலைக்குத் திரும்பியது. மிகவும் குறைவான நேரம் நிகழ்ந்த அந்த மாற்றத்தை உலகத்தின் எந்த விஞ்ஞான கருவியும் கண்டுபிடிக்கவில்லை. பூமி வழக்கம் போல் சுழன்று கொண்டு இருந்தது. சூரியன் உதிப்பதும், அஸ்தமிப்பதும் வழக்கம்போல் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் பூமிக்குச் சில கோடி மைல்கள் தொலைவில் இருக்கும், 'பிராக்ஸிமா செஞ்சுவரி’ என்று அழைக்கப்படும் அந்த நட்சத்திரம், தன்னுடைய பாதையை விட்டு மயிரிழை விலகி நழுவிப் போகத் தொடங்கியது. அன்று தேதி, ஏப்ரல் பதிமூன்று க்ரீன்விச் நேரம் 14.30 நிமிடங்கள். பாதி உலகம் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது.