அவரது நாவல்களை தமிழில் மொழிபெயர்த்தவர் சுசீலா கனகதுர்கா. இன்றோ கௌரி கிருபானந்தன், அவரது தெலுங்கு நாவல்களை தொடர்ச்சியாக தமிழாக்கம் செய்து வருகிறார். மொழிபெயர்ப்பும் முன்பை விட வசீகரமாக, நெருக்கமாக இருக்கிறது. ஆனால், இது செய்தியல்ல. காரணம், மொழிபெயர்ப்பாளர்களை மாற்றும் உரிமை சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கும், பதிப்பகத்துக்கும் இருக்கிறது. எனவே இதற்குள் நாம் போக வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒரு காலத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் பெயரில் தமிழில் வந்த நாவல்களில் பெரும்பாலானவை, அவரால் எழுதப்பட்டவை அல்ல என்பது அதிர்ச்சியான விஷயமல்லவா? யெஸ், வேறு தெலுங்கு எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள் அனைத்தும் எண்டமூரி வீரேந்திரநாத் பெயரில் தமிழில் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவைகள்தான் தமிழக வாடகை நூலகங்களை அலங்கரிக்கின்றன.