சிறு வயதில் நான் மிகவும் விரும்பிப் படித்த இன்னொரு நாவல் ஒளிவதற்கு இடமில்லை. எட்டு ஒன்பது வயதில் படித்த நாவல். வைரமுருகன், சீன வில்லன்கள், நாலு மாதத்தில் கொல்லும் மருந்து, ஆபாச புகைப்படங்கள் என்று போகும் நாவல். அந்த வயதில் மிக த்ரில்லிங் ஆக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டிருக்கும்தான். ஆனால் இன்று திரும்பிப் படித்துப் பார்த்தால் அறுபதுகளின் ஜெய்ஷங்கர் படம் பார்ப்பது போலத்தான் இருக்கிறது.பின்னாளில் படித்தவற்றில் ராசி குறிப்பிட வேண்டிய நாவல். வழக்கம் போலவே சரளமாகச் செல்கிறது. ஒரே கோத்திரம் என்று ஒரு காதல் தடைப்படுகிறது. நாயகி கல்யாணம்தானே பண்ணிக் கொள்ளக் கூடாது, சேர்ந்து வாழ்கிறோம் என்று கிளம்புகிறாள். முடிவு என்று ஒன்றை எழுதாதது இந்தக் கதையை உயர்த்துகிறது.