சமயம், சாதி, இன, குலப்பிரிவுகள் போன்றவை தமிழரிடையே ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிட்டமையினைப் பிற்காலப் பாண்டியர் கால, நாயக்கர் காலத் தமிழகம் காட்டுகின்றது. பேரிலக்கியங்கள் தோன்றுகின்ற காலச்சூழல் மறைந்து, அந்தாதி, உலா, கலம்பகம், பிள்ளைத் தமிழ், தூது, பரணி, கோவை, மாலை போன்ற சிற்றிலக்கியங்கள் பெருகத் தோன்றும் காலம் மலர்ந்தது. சமயத் தலைவர்களையும், கொடையாளிகளையும், தெய்வங்களையும், குறுநில மன்னர்களையும், புலவர்கள் புனைந்து பாடத் தொடங்கினர். அளவுக்கு மீறிய புகழ்ச்சி, மீண்டும் மீண்டும் பல நூல்களில் இடம்பெறும். அலுப்பூட்டக்கூடிய, செயற்கையான வருணனைகள், பிறமொழி கற்பித்த உத்திகள், அணிகள், பிறமொழிச் சொற்கள் ஆகியன இக்காலத்து இலக்கியங்களின் பண்புகளாக அமைந்தன.