பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து இளைப்பாறலைத் தரும் வாய்ப்புகளை வாழ்க்கை ஏற்படுத்துகிறது. சில சமயம் ரகசியங்கள் மூர்க்கத்தனமாக உடைபடும் அபாயங்கள் நேர்கின்றன. சில சமயம் அவற்றைப் பேசியே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தைச் சிலர் எதிர்கொள்ளும்போது நூலிழை பிரிவதுபோல் மெல்ல மெல்ல அவை பிரியலாம். அல்லது சலனமற்ற குளத்தில் எறிந்த கல்லைப் போல் அலைகளை ஏற்படுத்தலாம். அபூர்வமாக அவை அடுத்தவரின் மனத்தை இளக்கி உறவின் ஒரு மூடப்பட்ட சன்னலைத் திறக்கலாம்.