ஆண்கள் குடும்பத்தைப்பற்றி நினைப்பது இல்லை எனவும், எப்போதும் நண்பர்களுடனேயே சுற்றுகிறார்கள் எனவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. நண்பர்களுடன் சுற்றுகிறார்கள்தான். ஏனெனில், ஆண்களின் நட்பு வட்டம் பெரும்பாலும் வெளிப்படைத் தன்மையும், நேர்மையும் கொண்டது. அதிகபட்சம், இரண்டாவது பியரில் 'ஒரு மேட்டர் மச்சான்...’ என மனசைத் திறந்து சொல்லத் துவங்கிவிடுவார்கள். நட்பு என்றால் நட்பு, பகை என்றால் பகை. இரண்டிலும் 100 விழுக்காடு நேர்மையே ஆண்கள் உலகின் அடிப்படை. உண்மையில் ஆண்களுக்கான பெரிய ஆசுவாசம் ஆண் களேதான். சினிமாவில் சித்திரிப்பதுபோல, பெண்கள் அல்ல!
ஆனால், குடும்பம் என்பது வேறு. அங்கு ஆண் பொறுப்புள்ள நபராக இருக்கவோ, நடிக்கவோ வேண்டியிருக்கிறது. தினம் தினம் குடும்பம் உற்பத்தி செய்யும் பொருளாதார மற்றும் மன அழுத்தங்களை ஆண்கள் தங்கள் நண்பர்களிடமே பகிர்கின்றனர்.