பட்டினத்திற்கு வந்தபின் அவனுடைய வாழ்வு மாறித்தானாக வேண்டியிருந்தது. கந்தசாமி வாத்தியாரின் கானாமுத நடன விநோத நாடகசபாவில் பாடல்களும் , வசனமும் எழுதிச் சமயா சமயங்களில் -மேடையேறி நடித்தும் வந்த காலத்தில் அவனுடைய வாழ்க்கையில் இவ்வளவு வேகமுமில்லை. பிரகாசமுமில்லை. வெளிச்சம்தானா வாழ்வு என்று கேட்டுப் பயனில்லை . பட்டினத்தில் சூரியனின் வெளிச்சம் மட்டும் வாழப்போதாது. மனிநன் போடுகிற அல்லது மனிதனைச் சுற்றிப் போடப்படுகிற வெளிச்சமே சில சமயங்களில் சூரியனின் வெளிச்சத்தைவிடப் பெரிதாயிருக்க வேண்டிய அவசியம் இங்கு உண்டு.