"வெற்றி முழக்கம் ஓர் அழகிய பெருங்காப்பியத்தின் உரைநடைக் கதை. ஒரு நாவலைப் போன்ற சுவையான அமைப்பும், கதை நிகழ்ச்சிகளின் திருப்பமும், இந்நெடுங்கதை எந்த மூலத்திலிருந்து உரைநடை யாக்கப்பட்டதோ அந்த மூலக் காப்பியத்திலேயே செம்மையாக அமைந்துள்ளன. நான் செய்ததெல்லாம் அவற்றை நல்ல உரை நடையில் கதையாக்கிய வேலை ஒன்று மட்டும் தான்.
பாஸ கவியின் சொப்பன வாசவதத்தா, கொங்கு வேளின் பெருங்கதை ஆகிய காவியங்கள் இந்தச் சுவையான கதையைக் கவிதையில் கூறுகின்றன. இவற்றில் தமிழிலுள்ள பெருங்கதை பிற்பகுதியில் சரியாக விளக்கம் பெறாததால் டாக்டர் உ.வே.சா. ஐயரவர்கள் எழுதியுள்ள உதயணன் சரிதச் சுருக்கத்திலிருந்து குறிப்பிட்ட பகுதிக்கான கதையை, நடை மாறாமல் அப்படியே இங்கு எடுத்து அளிக்க நேர்ந்தது. "