"இ...இ..ஆ...மா..." மாதங்கிக்குத் தொண்டைக்குள் வார்த்தை திக்கியது. கண்களில் கனிவுடன் அவளைப் பார்த்தவாறு, "என்னம்மா.. ரோஹித் ஏதாவது சொன்னானா?” என்று கேட்டார். "ம்.." என முணுமுணுத்தபடி மெல்லத் தலையை மேலும் கீழும் ஆட்டினாள். அவளருகில் வந்து அவளுடைய தலையைப் பாசத் துடன் தடவிக் கொடுத்தபடி, "தெரியுமே... இல்லைன்னா நீ இப்படி நடுங்குவியா...? ஆமா.. என்ன சொன்னாரு துரை..?' எனக் கேட்டார். மாதங்கி கண்களில் கலக்கத்துடன் அவரைப் பார்த்த வாறு, "அ..அ...து... வந்து.. அ...வங்க பி...பிரண்ட்ஸ் சாய... சாயந்திரம் வர்றாங்களாம்... அவரு ரூமை கிளீன் பண்ணச் சொன்னாரு..." திக்கியபடி சொல்லியவாறு தரையில் கிடந்த கலர் பென்சில்களை எடுத்து அடுக்கத் தொடங்கினாள். அவளிடமிருந்து பென்சில்களை வாங்கி மேஜையின் மேல் வைத்தபடி, "ஓஹோ... அவரு சொன்னதும் நீ போகாமல் கிளீன் பண்ணப்போறியாக் கும்..!" புன்முறுவலுடன் அவளைப் பார்த்தார். "இல்... ஆமாம்..." எனச் சின்னக் குரலில் கூறியவாறு தலையை எல்லாப் பக்கமும் ஆட்டினாள் மாதங்கி. கலைந்து கிடந்த புத்தகங்களை அடுக்கத் தொடங்கிய அவளுடைய பிஞ்சு விரல்களைத் தடுத்துப் பிடித்தபடி, "அதொண்ணும் வேணாம்... நீ ஸ்கூலுக்குக் கிளம்பு.. துரை வந்து தானே கிளீன் பண்ணிக்கட்டும்..” என்றார் அழுத்தத்துடன்.