இக்காப்பியத்தின் கருப்பொருள்களுள் ஒன்றான "ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்பதை, இசைக் கருவியாகிய யாழின் வழி ஊழ்செயற்பட்டதனை - அதன் காரணமாக்க் கண்ணீர் வரியான கானல்வரி காப்பியத்தின் திருப்புமுனையாக அமைந்ததனை "கானல் வரி" எனும் இக்காதை விளக்குகிறது. கானல்=நெய்தலங்கானல்; அதாவது நெய்தல் நிலமாகிய கடற்கரையிடத்தே அமைந்துள்ள அழகிய சோலையாம். வரி=வரிப்பாடல்கள், நெய்தலங்கானலின்கண் கோவலனும் மாதவியும் கானல்வரி எனும் இசைப்பாடல்களைப் பாட அதன் வழியாக இருவருக்கும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டத் தொடங்கிய செய்தியை இப்பகுதி கூறுவதாக அமைந்துள்ளது.