தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும் பெண்டிர்களுலும், கற்றவரும் கல்லாதவரும் ஆகிய யாவரும் ஔவையார் என்னும் பெயரை அறிந்திருப்பதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதி நூல்களேயாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சியுடையவ ரெவரும் ஔவையாரின் நீதிநூல்களில் ஒன்றையாவது படித்தே யிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும், கருத்துக்களும் இந்நீதி நூல்களில் தெளிவுற அமைந்து விளங்குகின்றன.