மழைநாள் மரணம்
திகிலும், த்ரில்லும், மர்மங்களும், கலகலப்பும், துரத்தல்களும். மோதல்களும் நிறைந்த மெகா க்ரைம் த்ரில்லர்
சிரஞ்ஜீவி யோசித்தான். கற்றுக்கொண்ட கராத்தே பயிற்சிகள் முழுவதையும் நினைவிற்குக்கொண்டு வர வேண்டியிருந்தது.
'கழுகுக் காத்தாஸ்' என்பது கராத்தே பயிற்சியில் ஒரு பயிற்சி. அதில் கைவிரல்கள் சட்டென வளைந்து கழுகின் கால்நகங்கள் போல்மாறி எதிரியின் கண்களிலோ, சதைகளிலோ பாயும். கொத் துச் சதையை வெளியே எடுக்கும். அதே சமயம் கால்கள் சிலம்பாட் டத்தின் போது வைக்கப்படும் அடிகள் போல், முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் பொருத்தப்பட்டு உதைக்கும்.
எதிரி கழுகுக் காத்தாஸ் பயிற்சி அற்றவனாக இருந்தால் உதை பட்டு நான்கு நாட்களுக்கு எழுந்திருக்க மாட்டான். ஒரு மாதத்திற்கு உடம்பில் போடப்படும் கட்டுகளை அவிழ்க்க மாட்டான்.
சிரஞ்ஜீவி அடிவயிற்றிலிருந்து கத்திக்கொண்டே கழுகுக் காத் தாஸ் போட்டான். அவன் கால்களும், கைகளும் மின்னல்போல் இங்கே,அங்கே என்று அவனைச் சுற்றி எல்லா இடங்களிலும் மிகப் பலம் பொருந்தி தென்பட்டன. ஆனால் எல்லாம் காற்றில். விஷ்க், விஷ்க் என்று காற்று கிழிபட்டது.
எதிரியும் காத்தாஸ் அறிந்தவனாய் இருந்தான். சிரஞ்ஜீவியின் கையும், காலும் மின்னலாகத் தெறித்த இடங்களில் எல்லாம் அவன் தன் உடலின் எந்தப் பகுதியும் இல்லாதவாறு பார்த்துக் கொண்டான். அது மட்டுமில்லை, சட்டென்று குனிந்து உட்கார்ந்து, உட்கார்ந்த வேகத்தில் ஒரு காலை நீட்டி ஒரு வெட்டு வெட்ட, அந்த வெட்டு சிரஞ்ஜீவியின் ஆடு சதையில் ஒரு நரம்பைத் தனியாகக் கிள்ளியெடுத்த மாதிரி விழுந்தது.
சிரஞ்ஜீவி மேலும் ஆக்ரோஷமானான். அப்படியே எதிரியின் மேல் விழுந்தான். அவன் கை விரல்கள் எதிரியின் குரல் வளையைப் பற்ற முயற்சி செய்தன. மற்றொரு கை எதிரியின் மற்ற இரு கைகளாலும் பிடிக்கப்பட்டு, முறுக்கப்பட்டு, சிரஞ்ஜீவி வேறு வழியின்றி, எதிரியின் கழுத்தில் இருந்த கரத்தைத் தளர்த்தினான். தனது இன்னொரு கையைக் காப்பாற்றிக் கொள்ள, அது முறுக்கப்படும் திசையிலேயே உடலைத் திருப்பி, சடாரென்று ஒர் உதறு உதறி எழுந்தான்.