ஐயரவர்கள் தம்முடைய வரலாற்றை எழுத வேண்டுமென்று அடிக்கடி பலர் வற்புறுத்தி
வந்தார்கள். அதனால் 6-1-1940 முதல் ஆனந்தவிகடனில் ஒவ்வோர் இதழிலும் தம்
வரலாற்றை வெளியிட்டு வந்தார்கள். 1942ஆம் ஆண்டு மே மாதம் வரையில் இந்தச்
'சுயசரிதம்' வெளியாயிற்று. 1942ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐயரவர்கள்
அமரராகிவிட்டார்கள். ஆகவே 122 அத்தியாயங்களோடு வரலாறு நின்றுவிட்டது.
அதிலுள்ள இறுதி வாக்கியம், 'மேலே ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு,
பெருங்கதை என்பவற்றில் என் கருத்தைச் செலுத்தலானேன்' என்பது. பெருங்கதை
ஆதியும் அந்தமும் இல்லாமல் இருந்தது.