இந்த தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதைக்கும் சுவாரஸ்யமான பின்கதை உண்டு. கொங்குவெளியில் நிஜத்தில் வாழ்ந்த மனிதர்களையே கொஞ்சம் சாகசம் சேர்த்து புனையாக்கியுள்ளேன்.
காலம்காலமாக கொங்குவெளி நிலம் பரந்து விரிந்து ஏகாந்தமாக்க் கிடக்கிறது. புராதனங்களும் தொன்மங்களும் கலைகளும் கூத்துகளும் சடங்குகளும் திருவிழாக்களும் பெருமூச்சு விட்டபடி கதைகளைக் கூறியபடியே உள்ளன. மூதாதையர்கள் உயிர்பெற்றுவந்து திண்ணைகளில் வீதிகளில் கோயில் மடங்களில் கால்நீட்டி சாவகாசமாக உட்கார்ந்து கதைகளைச் சொல்லியபடியே இருக்கின்றனர். காலநதிப் பிரவாகத்தில் சிறு கெண்டை மீன்போல எதிர்த்திசை நோக்கி நீந்தியபடியே யாவற்றையும் நிதானமாகக் கேட்டுக்கொண்டே, முகத்துவாரம் அடையமுடியாத வாழ்வில் இன்னும் எழுதக்கூடும் என்ற நம்பிக்கையோடு பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.